தமிழீழ விடுதலைப் போராட்டம் தீவிர ஆயுத போராட்டமாக பரவிய அதே ஆண்டுதான் (1983) சூடான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிறிஸ்தவப் பெரும்பான்மை மக்கள் அந்நாட்டின் இஸ்லாமிய அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் இறங்கினார்கள்.
சூடான் அரசு தம்மை இஸ்லாமிய மேலாதிக்கத்துக்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் உட்படுத்தி நசுக்கப் பார்க்கிறது என்பதே தென் சூடான் போராட்டக் குழுக்களின் நிலைப்பாடாக இருந்தது. இதில் உண்மை இருக்கின்றது.
ஆனால் இந்த உண்மையினை பெரிதாக்கி தமது நலன்களை அதற்குள் புகுத்தி தம் நலனை அடைய சர்வதேசம் முயற்சித்தது என்பதும் பேருண்மையானது. இது ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிட்டு இந்தியா எவ்வாறு தமது நலன்களை பெற முயற்சித்ததோ அதே போல சூடானிலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தமது கைங்கரியத்தினை திட்டமிட்டு நகர்த்தின.
பலர் நினைக்கலாம் சூடானில் எண்ணெய் வளம் இருப்பதனால் மேற்கத்தைய சமூகம் அக்கறை காட்டியது என்று ஆனால் அது பின்னைய நாளில். எண்ணெய்வளம் கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே செங்கடல், சுயெஸ் கால்வாய், இந்து மா கடல் என்பவற்றின் ஊடாக அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாதைகளின் பாதுகாப்பிற்கும் அதை ஒட்டிய வேறு அலுவல்களுக்கும் சூடானின் புவியியல் அமைவிடம் இன்றியமையாதது. இதுதான் மேற்கத்தைய சமூகத்தின் நூற்றாண்டு கால திட்டமாக இருந்தது.
சூடான் சுதந்திரம் அடைவதற்கு முன்பாக மேற்கத்தைய குடியேற்றவாதத்திற்கு எதிராக சூடான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்கள், பல ஆயுதக் கிளர்ச்சிகள் முறியடிக்கப்பட்டன. இதன் காரணமாக, சூடான் மக்களை பிரித்தாளும் நோக்கில் அந்நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்த மக்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவதற்கு பிரித்தானியப் பேரரசு முயற்சியெடுத்து அதில் வெற்றி கண்டது.
ஆனால் இலங்கைத்தீவில் பிரிந்து இருந்தவர்களை பிரித்தானியா ஒன்றாக்கி விட்டு சென்றது. ஆகவே பிரிப்பதும் ஒன்றாக்குவதும் தமது நலன்களுக்காகவே மேற்கத்தைய சமூகம் செய்து வருகின்றமை கண்கூடு.
1956ஆம் ஆண்டு சூடான் சுதந்திரமடைந்ததில் இருந்து சூடான் அரசு மீது அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கு தென்சூடான் மக்களின் பிரச்சினைகளை அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் காலத்துக்குக் காலம் பயன்படுத்தத் தவறவில்லை. அதாவது இலங்கைத்தீவில் தமிழர் பிரச்சினைகளை அயல் நாடுகள் மற்றும் மேற்கத்தைய சமூகம் பயன்படுத்தியது போன்றுதான் சூடானிலும் நிலமை இருந்தது.
1980 வரை சூடானில் சர்வாதிகார ஆட்சி நடாத்திய நிமேரி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் நண்பராகவிருந்தார். ஆனால் 1983 ல் நிமேரியின் அரசு தீடிரென இஸ்லாமிய “ஷரியா” சட்டத்தை அமுல்படுத்துவதாக கூறியது. இது முஸ்லிம்கள் அல்லாத தென்சூடானியர் மத்தியில் மேலும் எதிர்ப்பலைகளைத் தூண்டிவிட்டது “பொர்” என்ற நகரிலிருந்த இராணுவ முகாம் அரசுக்கெதிராகக் கலகம் செய்தது.
இக்கலகத்தை அடக்கவென அரசால் அனுப்பப்பட்ட ஜோன் கரெங் என்ற இராணுவத் தளபதி கலக்காரர்களுடன் சேர்ந்து விடுதலை இராணுவத்தை உருவாக்கினார். இதுவே சூடானிய விடுதலை இயக்கமாக பரிணமித்தது.
எவ்வாறு இந்திய அரசாங்கம் ஸ்ரீலங்கா அரசு மீது அழுத்தத்தைச் செலுத்தி அதைத் தன் வழிக்கு வரவைப்பதற்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்த முயற்சித்ததோ அதே பாணியில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடான பிரித்தானியாவும் சூடான் அரசாங்கம் தன் கையினை மீறி செல்வதனை கட்டுப்படுத்துவதற்காக தென் சூடான் மக்களின் போராட்டத்தை பயன்படுத்தின.
இதனால் ஆத்திரமடைந்த சூடானிய இஸ்லாமிய அரசு ( இப்போ வடக்கு சூடான்) தென் சூடானின் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி மேற்குலகத்திற்கு எதிராக சீனாவை பயன்படுத்த திட்டமிட்டு அதன்படி செய்தது. உண்மையில் மஹிந்த இராஜபக்ஷவும் இதே பாணியினைத்தான் தனது ஆட்சியில் செய்து வருகின்றார். ஆனால் மஹிந்த எண்ணெய்யினை காட்டி சீனாவை வைத்திருக்கவில்லை மாறாக கடற்பிராந்திய போக்குவரத்தினை வைத்தே தனது காய்களை நகர்த்துகின்றார்.
சீனாவுடனான சூடானின் உறவை சிதைப்பதற்கு தென் சூடான் போராட்ட இயக்கத்துக்கு அமெரிக்கா கூடிய இரகசிய ஆதரவு வழங்கத் தொடங்கியது. தென் சூடான் போராட்ட இயக்கம் தன் சொந்தக் காலில் சுதந்திரமாக நின்று செயல்படும் ஓர் அமைப்பாக இருக்கவில்லை. அதாவது எமது போராட்ட இயக்கத்தைப்போல சூடானிய விடுதலை இராணுவம் தன் மக்களையே நம்பி இருக்கவில்லை. இது அமெரிக்க, பிரித்தானிய செல்வாக்கிற்கு அமையவே அதன் தலைமை செயல்பட்டு வரவேண்டியது தவிர்க்க முடியாததாகி விட்டது.
இதைப் பயன்படுத்தி சூடான் அரசு மீது படிப்படியாகத் தமது செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தென் சூடான் போராட்ட இயக்கத்தை பேச்சுவார்த்தையில் இறக்கின. சூடான் அரசுக்கும் தென்சூடான் போராட்ட அமைப்பிற்கும் இடையில் ஆரம்பித்த பேச்சுக்களுக்கு நோர்வே அனுசரணையாளராக இருக்குமாறு அமெரிக்கா கூறியது.
உண்மையில் இந்த பேச்சுக்களின் ஊடாக சூடான் அரசு மீது தனது செல்வாக்கைப் பெருக்கி அதன் மூலம் அந்நாட்டின் எண்ணெய் வளம், கனிம வளம் ஆகியவற்றை பெறவே அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் திட்டமிட்டன. மாறாக தென் சூடான் மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க அல்ல.
இதனை தற்போது சூடானிய விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயமாக இருக்கும் பகான் அமும் என்பவரே நோர்வேயில் வைத்து 2005 ஆம் ஆண்டு கூறியுள்ளார். அதாவது உலகத்தில் யாரை நம்பினாலும் நோர்வே காரரை நம்ப கூடாது என தம் பட்டறிவை பகிர்ந்து கொண்டார். அதே வேளை நோர்வேயுடனான செயற்பாடு தவிர்க்க முடியாது எனவும் கூறினார்.
நோர்வே அனுசரணையுடன் சூடான் அரசுக்கும் தென் சூடான் அமைப்பிற்கும் இடையில் 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு இடைக்கால ஒழுங்கு பற்றிய உடன்பாடு காணப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி தென் சூடான் தனது போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை புனரமைக்க IGQD என்ற முக்கிய கட்டமைப்புடன் தென் சூடான் மக்களின் சுய நிர்ணைய உரிமையும் அங்கீகரிக்கப்பட்டது. அதாவது வடக்கு சூடானும் தெற்கு சூடானும் சேர்ந்து வாழ்வதா பிரிந்து செல்வதா என்ற உரிமையினையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உண்மையில் 2002 ஆம் ஆண்டு நோர்வே மத்தியஸ்தத்தின் கீழான பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளும் மேற்கண்டவாறான ஓர் திட்டத்தினையே முன்வைத்தார்கள்.
சூடானுடைய இடைக்கால திட்டத்தினை சர்வதேசம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்காவும் நோர்வேயும் ஒற்றைக்காலில் நின்றனர்.
இதனால் வடக்கு சூடான் ஆட்சியாளருக்கு இடைக்கால சபையினை நடைமுறைப்படுத்துவதினை தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆனால் இலங்கை அரசைப்பொறுத்தவரை விடுதலைப்புலிகளால் கொடுக்கப்பட்ட இடைக்கால அரசு திட்டத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு சர்வதேச நாடுகளின் குறிப்பாக, இணைத்தலைமை நாடுகளின் அசமந்த போக்கும் ஓர் காரணமாக இருந்தது. அத்துடன் இந்தியாவின் தலையீடும் காரணம் என கூறப்படுகின்றது.
ஆனால் சூடானில் சர்வதேசத்தின் ஒருங்கிணைந்த அழுத்தம் காரணமாக இடைக்கால நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதனை விட நடைமுறையில் உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றுதான் கூறவேண்டும். காரணம் வடக்கு சூடான் ( சூடானிய ஆட்சியாளர்) தென் சூடானிற்கு ஒப்பந்தத்தில் கூறியது போல எதுவும் செய்யவில்லை.
புனர்வாழ்வும் செய்து கொடுக்கவில்லை, அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாக தெற்கு சூடானியரின் எண்ணெயினை அகழ்ந்து சீனாவிற்கு கொடுத்தவண்ணம் இருந்தது. உண்மையில் இந்த எண்ணெய் எல்லாவற்றையும் அமெரிக்காவிற்கும் நோர்வேக்கும் கொடுத்திருந்தால் இப்போ சூடான் பிரிந்து போக சாத்தியம் குறைந்திருக்கும்.
ஆனால் சூடான் அரசின் அதிபர் உமர் அல் பசீர் அவர்கள் என்ன செய்தார்?
அமெரிக்காவிற்கு ஆத்திரம் வரும் அளவிற்கு சீனாவை அரவணைத்தார். தென் சூடான் மக்களை புறக்கணித்தார். இஸ்லாமிய சட்டங்களை திணித்தார். இவற்றை பகிரங்கமாகவே செய்தார். இதே போல்தான் மஹிந்த இராஜபக்சவும் சூடானிய அதிபர் போன்றே தமிழர்களை வதைத்து வருகின்றார். ஆனால் சீனாவை போல இந்தியா மற்றும் அமெரிக்காவை பகைக்காமல் காய்களை நகர்த்துகின்றார்.
சூடானின் தற்போதைய நிலமை மஹிந்தவிற்கு இனி பாடமாக அமையும் என்பதனால் மஹிந்த இராஜபக்ஷா மேற்கு உலகத்துடன் நெருக்கமாகவே இருப்பார்.
சினிமாவில் ஒரு நடிகர் கூறுவார் அதாவது ஒரு தடவை முடிவெடுத்தால் அப்புறம் என்னாலேயே அதை மாற்ற முடியாது என்று. அதுபோன்றுதான் மேற்குலகமும் முடிவெடுத்து விட்டார்கள் என்றால் அதன் பின்பு மனித உரிமைகள் என்ன, சட்டங்கள் என்ன, படுகொலைகள் என்ன எதனையுமே கருத்தில் கொள்ள மாட்டார்கள் அந்த நேரம் அவர்கள் கண்களுக்கு எல்லாம் சரியாகவே இருக்கும்.
ஏனென்றால் சூடான் விடுதலை இயக்க தலைவர் முன்நாள் இராணுவ வீரரே. இவரும் இவரது இயக்கமும் பல்வேறு கலவரங்களின் போது படுகொலைகளை செய்திருக்கின்றது. கொள்ளைகள், பாலியல் பலாத்காரங்கள், உள்ளூரில் அடாவடித்தனம், சிறார்களை கட்டாயமாக சேர்த்தல் ஆகிய உரிமை மீறல்களை செய்திருந்தது.
ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை சூடானிய விடுதலை அமைப்பினைப்போல மீறல்களில் ஈடுபடவில்லை. ஆனால் சூடனிய விடுதலை அமைப்பு அமெரிக்காவிற்கு மிகவும் நல்லவர்கள். ஏனென்றால் தமது சொல்லைக்கேட்டு இறுதிவரை நடதிருக்கின்றார்கள் என்பதற்காக மட்டுமல்ல மாறாக இவர்களை வைத்துத்தான் காரியத்தை சாதிக்கலாம் என்பதும் ஆகும்.
இதே வேளை விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தார்கள். காரணம் அவர்கள் சொற்களை கேட்கவில்லைப் போலும். அல்லது விடுதலைப் புலிகளைவிட பெரிய புதையல் ஒன்று அமெரிக்காவிற்கு கிடைத்திருக்கலாம்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் பொறுத்தவரை சூடான் பிரிவதனை முதலாவது நிகழ்சி நிரலாக வைத்து செயற்பட்டது என்றே கூறலாம். பூகோள கேந்திரம், எண்ணெய் வளம், கனிய வளம், சீன ஆதிக்கம், மேற்குலகிற்கு எதிரான இஸ்லாமிய ஆதிக்கம் என்பனவே அமெரிக்காவின் இந்த முடிவிற்கு காரணம்.
ஆனால் உண்மையில் அமெரிக்க பிரிட்டன் போன்ற மேற்குலக வல்லாதிக்க நலன்களின் ஊடாக தென் சூடானிய மக்களும் விடுதலை இயக்கமும் எவ்வாறு சாமர்த்தியமாக நகர்ந்து வந்தார்கள்? இதற்காக அவர்கள் மில்லியன் கணக்கான உயிர்களை தியாகம் செய்தார்கள்.
மலேரியா, குடி நீர் இல்லாமை, பட்டினி, கொலரா போன்ற நோய் பிணிகளாலும், வடக்கு சூடான் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டும், பெண்கள்-குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டும் நாளாந்தம் ஆயிரக்கணக்கானோரை இழந்தார்கள்.
இந்த இழப்புக்களுடன் மேலதிகமாக தம் தலைவரையும் 2005 இல் இழந்தார்கள். ஆனால் உண்மையில் இவை எல்லாவற்றையும் கடந்து பொறுமையாக; இழப்புக்களை ஏணியாக பயன்படுத்தினார்கள். இன்று வெற்றியின் விழிம்பில் நிற்கின்றார்கள்.
அதாவது சுய நிர்ணைய அடிப்படையில் தாம் பிரிந்து செல்வதற்காக தேர்தல் மூலம் தீர்மானித்துள்ளார்கள்.
எமது இனத்தின் விடுதலைப்போராட்டமும் தெற்கு சூடானிய மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் போலவே பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் அவர்கள் வென்றுவிட்டார்கள். வாழ்த்துவோமாக.
அதே வேளை எமது போராட்டம் வெற்றியடையாமல் இருப்பதற்கு பல்வேறு புறச்சூழல்களும் சில அகச்சூழல்களும் காரணமாக அமைந்து வருகின்றன. அதற்காக தவறுகளையே சுட்டிக்காட்டி இனிவரும் காலங்களில் அரசியல் வேலை செய்யாது இழப்புக்களை மனதில் நிறுத்தி, இலட்சியத்தை பற்றிப்பிடித்து சூழலிற்கு ஏற்ப இராஜ தந்திர வழிமுறைகளை பின்பற்றி போராட்டத்தினை நகர்த்துவோம்.
கொசோவோ போல, தெற்கு சூடான் போல எமக்கான ஓர் சூழலும் வரும் அதுவரை சிங்கள அரசின் சூழ்ச்சிக்குள் வீழாது பயணிப்போம்.
- தாமரை
No comments:
Post a Comment