நெல்சன் மண்டேலா அவர்கள் தென் ஆபிரிக்காவில் கியுசெ என்னுமிடத்தில் 1918 யூலை 18 ஆம் திகதி பிறந்தார். தந்தையார் அரச தொழில் புரிபவராக இருந்தமையினால் உயர்கல்வி கற்று சட்ட வல்லுநர் ஆனார். 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார்.
தென் ஆபிரிக்க கறுப்பின மக்களின் தேவைக்காக முதன் முதலாக வழக்குறிஞர் ஒலிவர் தம்போவுடன் இணைந்து வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றை உருவாக்கி கறுப்பின மக்களை ஒன்று திரட்டி வெள்ளையர்களின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடாத்தி அதில் வெற்றியும் கண்டார்.
இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதை அவதானித்த வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாக செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை Sharpeville நகரில் நடாத்தினர். பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். (இது 1958 களில் எம்மவர்கள் காலிமுகத் திடலில் உண்ணாவிரதம் இருந்தபோது சிங்களக் காடையர்களால் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டதை ஒத்திருப்பதை காணலாம்.)
இதனையடுத்து சாத்வீக வழிமுறைகள் ஊடாகப் போராடி உரிமைகளைப் பெற முடியாதென்பதை உணர்ந்து கொண்ட மண்டேலா ஆயத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர். திட்டமிட்டபடி 1963 இல் மண்டேலா உட்பட 10 முக்கிய ANC [ African National Congress ]தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டன. இவ்வழக்கு 1963 இல் றிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையின் போது மண்டேலா அவர்கள், ‘நான் எனது வாழ்க்கை முழுவதையும் தென் ஆபிரிக்க மக்களின் உரிமைக்காகப் போராடுவதற்கு அர்ப்பணிக்கத் தயாராகவே இருக்கின்றேன். வெள்ளை இனத்தவரின் மேலாதிக்கத்திற்கு எதிராகவும் கறுப்பின மக்களின் உரிமைக்காகவும் போராடுவேன்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவ்வழக்கு 1964 இல் முடிவடைந்த போது வெள்ளையரின் நீதிமன்று அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமையைக் காரணம் காட்டி மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அவர் தனது ஆயுள் தண்டனையை றொப்பன் தீவில் அனுபவித்திருந்தார். அவரது கைதி இலக்கம் 466/64. 27 வருட கொடுஞ் சிறைவாசத்தின் பின் 1990 ஆண்டு மாசி மாதம் 11 ஆம் திகதி மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
1990 இல் அவர் விடுதலை செய்யப்பட்டமைக்கு உலக பொருளாதார, அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணம் எனக் கூறலாம். சோவியத் யூனியன் பல சிறுதுண்டுகளாக பிளவுபட்டமை முக்கிய காரணம் எனலாம். இதன் காரணமாக மேற்குலக நாடுகள் கம்யூனிசவாதம் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதிப்படுத்திய நிலையில் யதார்த்த ஜனநாயக முரண்பாடு கொண்ட தென் ஆபிரிக்க வெள்ளையர் அரசுக்கான தமது ஆதரவை வலுப்படுத்த முன்வரவில்லை. மூன்றாம் உலக நாடுகள் பல தென் ஆபிரிக்காவுடனான தொடர்பை முன்னரே துண்டித்து இருந்தமையாலும் தென் ஆபிரிக்க வெள்ளையர் அரசானது சுதேச கறுப்பின மக்களுடன் ஓர் உடன்பாட்டிற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லையேல் இன்று தென் ஆபிரிக்க வெள்ளையர்கள் சிம்பாப்வேயில் வாழ்ந்த வெள்ளையர்களின் நிலைக்கு வந்திருக்க வேண்டி இருந்திருக்கும் என்றும் அன்றைய தென் ஆபிரிக்க வெள்ளையர் அரசு உணர்ந்திருந்தது.
விடுதலை செய்யப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் உலக ஜனநாயகவாதத்தின் சின்னமாகவே தெரியப்பட்டார். உலக நாடுகள் பலவற்றின் அழைப்பை ஏற்று உலக மக்களைக் கவர்ந்த ஓர் மா மனிதராக வலம் வந்தார். யூதர்கள் அதிகமாக வாழ்கின்ற நியூயோர்க் நகரில் பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுடைய பிரதேசத்தில் ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என துணிவுடன் உரையாற்றி உலகத் தலைவர்களின் அணியில் முதன் நிலைக்கு உயர்த்தி புகழப்பட்டார். தென் ஆபிரிக்க மக்களுக்காக 27 வருடங்கள் கொடுஞ்சிறையில் வாழ்வை அர்ப்பணித்த விடுதலை வீரன் இன்னும் பல ஆண்டுகள் இப்பூமியில் நலமுடன் வாழ நாமும் வாழ்த்துவோம்.
உண்மையில் அமெரிக்க ஆட்சியாளர்களின் கோர முகத்தை உற்று நோக்கினால் அமெரிக்க அரசின் ஜனநாயகப் பயங்கரவாதத்தை இலகுவில் அடையாளம் காணலாம். உலகின் பயங்கரவாதிகள் எல்லோரும் அமெரிக்காவின் உற்ற நண்பர்கள். பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் உலகின் பயங்கரவாதத்திற்கு துணை போபவர்கள். அமெரிக்காவின் உற்ற நண்பர்கள் இதேபோல் மத்தியகிழக்கு இஸ்ரேல் அரசு, சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்ரினோ பினாச்சே என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஏன் அல் கைடாவின் பின்லாடன் கூட சி.ஐ.ஏ. இன் நெருங்கிய நண்பனே.
கேவலம் என்ன என்றால் இன்றும் கூட பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுகின்றமையை அங்கீகரிக்கின்ற அல்லது ஆதரவு வழங்குகின்ற முதலாவது நாடு அமெரிக்காதான். காசா பிரதேசத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசை இயங்க விடாமல் தடுத்த பெருமையும் அமெரிக்காவையே சேரும். இலங்கைத் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு விமானத்திலிருந்து குண்டு வீச கனவிலும் நினைவிலும் உதவுபவரும் இவரேயாவார். உலகின் ஜனநாயகப் போராட்டங்களை பயங்கரவாதப் பட்டியலிடும் இந்த அமெரிக்காவை விட வேறு யாரையும் இவ்வுலகில் குறிப்பிட முடியாது.
எவ்வளவு நாட்கள் சிந்தித்தார்களோ தெரியாது. இப்பொழுது மண்டேலா அவர்களை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். மேற்கத்தைய வெள்ளை இனத்தவர்கள் இந்த மனோநிலையில் இருந்து விடுபட இன்னும் எவ்வளவு காலம் செல்லும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் நியாயமான ஜனநாயகப் போராட்டங்கள் வெற்றியை அடைந்துள்ளன. அமெரிக்காவுக்கு தென்னாபிரிக்கா ஒரு முதல் பாடம் மட்டுமே. எமது விடுதலைப் போராட்டம் அடுத்த அத்தியாயம்.
1994 இல் தென்னாபிரிக்கா கறுப்பின மக்களுக்கு முதன் முதலாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டபோது தென் ஆபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார் இங்கும் கூட தென் ஆபிரிக்க வெள்ளையர்கள் அரசியல் மாற்றத்தை தமக்கு பாதகமில்லாமல் தேர்தல் மூலம் மாற்றி அமைத்தமையை நாம் அவதானிக்கலாம். ஏனெனில் வெள்ளையின வேட்பாளர் எப். டபிள்யூ. டி கிளார்க் தேர்தலின் வெற்றி பெற மாட்டார் என தெரிந்திருக்கும் தேர்தலை நடாத்தி அதனூடாக கறுப்பின மக்களிடம் ஆட்சி அதிகாரத்தைக் கை மாற்றிக் கொடுத்ததன் மூலம் சிம்பாப்வேயில் வெள்ளை இன நிலச்சுவாந்தர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை தவிர்த்துக் கொண்டதை வெள்ளை இனத்தவர்களுக்கான வெற்றி என்றே கொள்ளலாம்.
திரு. மண்டேலா அவர்கள் 1999 இல் தனது முதலாவது ஜனாதிபதி பதவிக் காலம் முடிவுற்ற நிலையில் அரசியலில் இருந்து விலகிக் கொண்டார்.மண்டேலா அவர்களின் 90 ஆவது வயதில் அமெரிக்க அரசனானது அவருக்கு எதிரான தடைகளை நீக்;கியதாக அறிக்கை வெளியிட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியது. நெல்சன் மண்டேலா ஒரு பயங்கரவாதி அவருடைய அமைப்பான ANC யும் பயங்கரவாதத்திற்கு உதவும் அமைப்பு என 1950 களில் அமெரிக்க செனட் சபை அறிவித்து தடை விதித்திருந்தது.
செனட் சபையால் பயங்கரவாதி என பட்டியலில் உள்ளவர்கள் அமெரிக்காவிற்கு செல்ல முடியாது. ஆனால் 1990 – 1994 காலப் பகுதியில் மண்டேலா அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். நியூ யோர்க் நகரில் இலட்சக்கணக்கான வெள்ளை இன மக்கள் மத்தியில் உரையாற்றினார். அது எப்படிச் சாத்தியமானது என அமெரிக்கா விளக்கமளிக்கவில்லை. நியூ யோர்க் நகரில் உரையாற்றிய போது மண்டேலா அவர்கள் அமெரிக்க சட்டப்படி ஒரு பயங்கரவாதி.
எது எப்படி இருப்பினும் கறுப்பினச்; சிங்கம் என வர்ணிக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை உரிமைகளுக்காகப் போராடுகின்ற மக்களுக்கு ஒரு ஆத்ம பலம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
No comments:
Post a Comment