Wednesday, August 17, 2011

இன்னும் விடியாத நள்ளிரவுச்சுதந்திரம்: வாசிக்கவேண்டியது !

நாம் தவிர்க்கவோ விலத்தவோ நினைத்தாலும் தவிர்க்கமுடியாதபடி எமக்கு இடப்பட்ட ஒரு புவியியல் சாபம் போல அது எமக்கு அருகில் அசையாத ஒரு பெரு நிலமாக இருக்கின்றது. அதுதான் இந்தியா என்ற பெயரால் அழைக்கப்படும் நிலப்பரப்பு. இந்தவாரம் அதன் அறுபத்திநான்காவது சுதந்திரதினம் ஓகஸ்ட்15ம் நாள் வந்துள்ளது. பிரித்தானிய காலனிஆட்சியாளர்களின் வருகை இந்தியாவுக்கு செய்த மிகப்பெரிய நன்மை என்னவென்றால் நானூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாகவும், சிறியதேசங்களாகவும் சிதறிக்கிடந்த ஒரு நிலப்பரப்பை இந்தியா என்ற பெயரில் தமது நிர்வாகதேவைக்காக ஒன்றிணைத்தது ஆகும். இந்தியா என்பது அதற்கு முன்னர் ஒருபோதுமே ஒரே தேசமாக இருந்தது கிடையாது. இந்தியா எங்கும் மண்ணுக்கு வெளியிலும் மண்ணுக்கு கீழேயும் விளைந்துகிடந்த பொருட்கள் காலகாலமாக அந்த நிலப்பரப்பை நோக்க சக்கரவர்த்திகளையும், மன்னர்களையும், கடற்பயணக்காரர்களையும் ஈர்த்துக் கொண்டே இருந்தது. வாசனைத்திரவியங்களும்,வைரங்களும்,பொன்னும் அயலில் இருந்த மொகலாய மன்னர்களை மட்டுமல்லாமல் கொஞ்சம் தூரத்தில் இருந்து பாரசீக சக்கரவர்த்திகளையும், மிக எட்டத்திலிருந்து மகாஅலெக்சாண்டர்களையும் கூட அந்த பாரதத்தை நோக்கி படையுடன் வரவைத்திருந்தது.

நாடுகளைதேடும் கடற்பயணங்கள் எல்லாம் ஒருவகையில் காலனிகளை உருவாக்கும் முயற்சிகளாகவே ஐரோப்பியரால் நடாத்தப்பட்டன. அந்தவகையில் 1498 போத்துக்கேசிய கடற்பயணக்காரரான வாஸ் கொட காமா வின் கப்பல் இந்தியாவின் கோழிகோடு துறைமுகத்துள் வந்தபோதே இந்தியாவுக்கான ஐரோப்பிய காலனி ஆட்சி ஆரம்பித்தது எனலாம்.
அதன்பின் ஒல்லாந்திய,பிரென்சிய,பிரித்தானிய என்று நீண்ட காலனிஆட்சிகள் நான்கு நூற்றாண்டுகளாக நீடித்து இறுதியில் உலகம்முழுதும் காலனி ஆட்சிகள் பொல பொலவென உதிர்ந்துகொண்டிருந்த காரணத்தாலும் இரண்டாம்உலகயுத்தத்தின் சுமையும் பாதிப்புகளும் ஐரோப்பியகாலனி ஆட்சியாளர்களை மிகவும் பாதித்தபடியாலும் போனால்போகிறது என்று பல ஆசியநாடுகளை விட்டு அவர்கள் வெளியேறினார்கள்.

அப்படி ஒரு பொழுதுதான் இந்தியாவின் சுதந்திரதினமாக 1947 ஓகஸ்ட் 15ல் வழங்கப்பட்டது. ஆனால் மிகவும் தந்திரமாகவே இந்த இந்தியசுதந்திரம் என்பது சாத்வீகபோராட்டம் ஓன்றினாலே கிடைத்தது என்றும் தனிமனித உண்ணாவிரதமும், கடற்கரையில் உப்பு அள்ளியதாலும்தான் சூரியனே அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராஜ்யம் வெளியேறியதாக ஒரு கருத்துருவாக்கம் காங்கிரஸ் பெருந்தலைகளால் காலகாலமாக செய்யப்பட்டுவருகின்றது. காந்திகள் இந்தியாவை தொடர்ந்து ஆளுவதற்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மீதான இந்த பிம்பங்கள் மிக அவசியமாக அவர்களுக்கு இருக்கின்றது. ஆனால் வரலாற்றின் மிகவும் மறைக்கப்பட்ட பக்கங்களாக இந்திய விடுதலைக்கான எண்ணற்றவர்களின் வீரமிகு போராட்டமும், அவர்களின் உயிர்த்தியாகங்களும் இருக்கின்றன.

இந்தியாவின் விடுதலைப்போராட்டத்தினுள் எந்தவிதமான தீவிரமும் கவனிப்பும் காட்டாத காந்தி தென்னாபிரிக்காவில் புகையிரவண்டியில் இருந்து நிறவெறியனால் வெளியே தள்ளி விழுத்தப்பட்ட பின்னரே இந்தியாவின் விடுதலை அரங்கினுள் 1915ல் வருகிறார். ஆனால் அதற்கு பல பத்து வருடங்களுக்கு முன்னரே ஐம்பத்தி ஏழு வருடங்களுக்கு முன்னரே பிரித்தானியருக்கு எதிராக உருவான சிப்பாய்க்கலவரத்தின் வீரமிகு புதல்வர்களை பற்றிய விபரங்கள் ஏறத்தாள முழுமையாக மறைக்கப்பட்டேஇருக்கின்றன. அதில் ஒரு உருக்கமான கட்டம் என்னவென்றால் 1857ம் ஆண்டு பாரக்புரி என்ற இடத்தில் பிரித்தானிய ராணுவ அதிகாரியை தாக்கினான் என்பதற்காக மங்கள் பாண்டே என்ற இந்திய வீரனை கைது செய்யும்படி பிரித்தானிய படையில் இருந்த ஒரு இந்திய ஜமேதாருக்கு பிரித்தானிய தளபதி ஜெணரல் கார்சே உத்தரவிட்டான். தனது தேசத்தவன் ஒருவனை கைதுசெய்ய மறுத்த ஜமேதாரும்,மங்கள் பாண்டேயும் 1857ஏப்ரல் 7ம் திகதி ஒன்றாக தூக்கிலிடப்பட்டார்கள்.

இதன் தொடர்ச்சியாக எழுந்த கலவரத்தை அடக்குவதற்கு பிரத்தியேக படைகளை சீனாவை நோக்கி சென்று கொண்டிருந்த தமது ஐரோப்பியபடைப்பிரிவில் இருந்தும் பெற்றுக்கொண்டு போராடவேண்டிய அளவுக்கு இந்தியர்களின் எழுச்சி எழுந்திருந்தது. இறுதியில் 1858 யூலை 20ம் திகதி குவாலியரில் நடந்த மோதலில் ராணி லட்சுமிபாய் கொல்லப்பட்டு குவாலியர்கோட்டை பிரித்தானியரால் மீட்கப்பட்டதுடன் தற்காலிகமாக ஓய்ந்தது. வெறும் வர்த்தக கம்பனியான கிழக்கிந்திய கம்பெனியை வைத்து இனியும் இந்தியாவை ஆளமுடியாது என்று பிரித்தானியர் முடிவெடுத்த தருணம் இதுதான். இந்திய விடுதலைக்கான முதற்புரட்சி,முதல் எதிர்வினையின் மூலவர்களை பற்றிய பக்கங்கள் ஏனோதானோ என்று விரிவாக இல்லாமலும்,மறைத்தும் வைத்துக்கொண்டு இந்தியாவின் சுதந்திரதினம் தனது அறுபத்திநான்கு வருடத்தை கடந்து வந்திருக்கிறது.

இதோ இந்தியாவின் விடுதலையை மானுடவிடுதலையை மானுடவிடுதலையாகவும், சமதர்மவிடுதலையாகவும் கனவுகண்டு அதற்காகவே போராடி தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கின் வரலாற்றை பாருங்களேன். எத்தனை உன்னதமானது அவனது வாழ்வு. இருபத்து மூன்று வயதுக்குள் முடிந்துபொன அவனின் வாழ்வு எங்கும் காணப்படும் இலட்சிய உறுதியும், சுதந்திரத்தின்மீதான வாஞ்சையும்தான் இன்றைய இந்தியாவின்விடுதலை. இன்றைக்கும் அவனின் நினைவு தினத்தன்றைக்கு (மார்ச்23) அரசியல்வாதிகள் வந்து மலர்மாலை வைப்பதுடன் அவனின் நினைவுகள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் சாலெட்ஜ் நதியின் கரையில் இருக்கும் அவனின் நினைவிடம் விடுதலைக்கு போராடும் அனைத்து மக்களுக்கும் ஆயிரம் செய்திகளை சொல்லியபடிக்கு அமைதியாக நின்றுகொண்டிருக்கிறது.

இந்தியா விடுதலை அடையவேண்டும் என்பதற்கும் மேலாக அது அனைவரையும் சமனாக நடாத்தும் ஒரு சமதர்ம தேசமாக மலரவேண்டும் என்பதற்பகாக இந்துஸ்தான் சோசலிச குடியரசு ஒன்றை அமைக்கும் அமைப்பு ஒன்றை கட்டியெழுப்பி புரட்சியை விதைத்தவன் அவன். லாஜாலஜபதி ராய் என்ற மிதவாத தலைவருடன் ஆயிரம் முரண்பாடுகளும், கருத்துவேறுபாடுகளும் பகத்சிங்குக்கு இருந்தபோதிலும் லாலாலஜபதிராய் பிரித்தானிய காவல்துறையால் கொல்லப்பட்போது அதற்கு பதில்சொல்ல பகத்சிங் முடிவெடுத்தார். அதற்கு காரணமான அதிகாரி சாண்டிரஸை அழித்த வழக்கில் பகத்சிங்கிற்கும் நண்பர்களுக்கும் மரணதண்டனை கிடைத்தது.

பகத்சிங்கிற்கும் நண்பர்களுக்கும் தூக்குத்தண்டனை கொடுக்கக்கூடாது என்று நாடு முழுவதிலும் மக்கள் கூட்டமாக தெருக்களில் எழுச்சிகொண்டிருந்தபோது இன்று இந்தியாவின் தேசத்தந்தையாக உருவகப்படுத்தப்படும் காந்தி இந்தியாவின் வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.(வைசிராய் என்பவர் இங்கிலாந்து ராணியின் பிரதிநிதியாக இந்தியாவை ஆளுபவர்).பகத்சிங்கின் தூக்குதண்டனைக்காக பிரித்தானியர் நிர்ணயித்த திகதிக்கு மூன்றுநாட்கள் முன்னதாகவே அந்த தண்டனையை வழங்குங்கள் என்று கேட்டிருந்தார். ஏனென்றால் தூக்குத்தண்டனை நிறைவேற்ற நிர்ணயிக்கப்பட்ட நாளில் அவருக்கு வேறு முக்கிய அலுவல் இருந்ததாம். பகத்சிங் காந்தியையோ அவரின் போராட்டமுறைகளையோ, அவரின் இந்துமத சனாதன முறைகளையோ ஏற்றுக்கொண்வராக இருந்தது கிடையாது. அதனால் அந்த அற்புத மானவீரனின் அறமும்,விடுதலைக்கான பிரகடனமும் பெரிய அளவில் இன்றளவும் இந்தியாவில் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆனால் பகத்சிங் இத்தகைய அங்கீகாரங்களையோ, அடிபணிவுகளையோ ஒருபோதும் பொருட்டாக நினைக்காமல் போரடிய வீரன். அவன் மிகவும் தெளிவாக தன்னை யார் என்றும் தான் யாருக்காக போராடுகிறேன் என்றும் தெளிவாக இருந்தவன். �நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடும் சம்பந்தப்பட்டவையே� என்று தனது இருபத்திஇரண்டு வயத்துக்குள் பிரகடனப்படுத்தியவன் அவன். பகத்சிங்கின் முயற்சிகள் இருபத்து மூன்றுவயத்துக்குள் முடிந்திருக்கலாம்.ஒரு தூக்குகயிற்றின் இறுக்கத்துடன் அவனின் வாழ்வு முடிந்திருக்கலாம். பகத்சிங் தனது இறுதிக்கணம்வரைக்கும் தனது தாயகத்தின்மீதான பற்றுதலை, தனது மண்ணின் மீதான சமரசம் செய்யமுடியாத தாகத்துடனும் இருந்தவன்.அவனுக்கு தூக்குதண்டனை கொடுத்தபோதும் அவர் அதனை ஏற்காமல் தன்னை துப்பாக்கியால் சுட்டோ, பீரங்கியால் சுட்டோ கொல்லும்படி கேட்டவர்.

ஏன் அப்படி கேட்கிறாய் என்று அதிகாரிகள் கேட்டபோது தூக்கிலே போட்டால் உயிர் பிரியும்போது தனது கால்கள் தனது தாய்மண்ணில்படாமல் அந்தரத்தில் இருக்கும் என்றும் துப்பாக்கியால் சுட்டால் தனது உயிர்போகும்போது தனது கால்கள் தனது மண்ணை தீண்டியபடியே போகும் என்றும் எந்தவிதமானசலனமும் இல்லாமல் வீரமுடன் கூறியவன் அவன். இந்தியசுதந்திரம் என்பது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் காந்தியின் முயற்சியாக இருக்கலாம். ஆனால் அடிமைப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் என்ற முறையிலும், விடுதலைக்காக போராடவேண்டி கட்டாயத்துக்குள் வாழும் ஒரு மக்கள் என்ற முறையிலும் எமக்கு பகத்சிங்கின் வாழ்வுதான் இந்திய சுதந்திரமாக தெரிகிறது. பகத்சிங் போன்ற பல்லாயிரம் வீரர்களினதும்,இந்தியதேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஸ்சந்திரபோசின் படையில் போராடிய பல ஆயிரம் இந்தியவீரர்களின் கனவாகவே எமக்கு இந்தியசுதந்திரம் தெரிகிறது.

பகத்சிங் தனது சிறையின் சுவரில் எப்போதும் எழுதிவைத்திருந்த சார்ல்ஸ் மகாய் அவர்களின் கவிதை பகத்சிங்கின் ஆன்மத்தை அழகாகவே காட்டுகிறது.

�பகைவர்களே இல்லை என்கிறாயா..?
அந்தோ என் நண்பனே
இப்பெருமிதம் மிக அற்பமானது
உனக்கு எதிரிகளே இல்லாது போனால்
நீ செய்திருப்பது அற்ப சொற்பமானது
துரோகி யாரையும் வீழ்த்தியிருக்கமாட்டாய்
போராட்டத்தில் கோழையாக இருந்திருப்பாய்..�

என்று நீளும் இந்த கவிதையை போலவே பகத்சிங்கிற்கு அவர் வாழும் போது எதிரிகளாக பிரித்தானியபேரரசு இருந்தது. அவர் மரணித்த பிறகு அவரின் நினைவையும் அவரின் கருத்துகளையும் மறைக்கும் இந்தியாவை ஆளும் காந்திகள் இருக்கிறார்கள்.

அதிர்வின் நன்றிகள் : ச.ச.முத்து.


No comments:

Post a Comment