Saturday, April 23, 2011

இந்திய தேசம் உங்களுக்காகத் திறந்து கிடக்கிறது

ந்திய தேசம் உங்களுக்காகத் திறந்து கிடக்கிறது, இந்திய தேசத்தின் மக்கள் நீங்கள் பணம் பண்ணிய பிறகு வெளியேற்றும் கழிவுகளில் வாழத் தவம் கிடக்கிறார்கள், வாருங்கள் இந்தியாவுக்கு, உலகின் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட விஷ வாயுவைக் கூட நீங்கள் எந்தப் பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் உற்பத்தி செய்யலாம், பல்லாயிரம் உயிர்களைக் கொல்லலாம், எந்தக் கேள்வியும் கேட்காமல் உங்களை பிரதமரின் தனிச் செயலரோ அல்லது மாநில முதல்வரோ கூடத் தனது மகிழுந்தில் வழியனுப்பி வைப்பார்கள், அவர்களுக்குரிய பங்கை மட்டும் நீங்கள் தவறாமல் கொடுத்து விட்டால் போதும், அவர்களே கூட அதிகாரப் பூர்வமாக தனது சொந்த நாட்டின் குடிமக்களைப் பிடித்துக் கொண்டு வந்து உங்கள் சோதனை எலி விளையாட்டுக்குத் தருவார்கள், உலக முதலாளிகளின் மருந்து ஆராய்ச்சியா? ம்ம், வாருங்கள் இந்தியாவுக்கு, பழங்குடி மக்களின் பெண்களை சோதனை எலிகளைப் போலப் பயன்படுத்தலாம், பலரைக் கொன்ற பிறகு மருந்து தவறானது என்று அறிக்கை விட்டு விட்டு அடுத்த மருந்தைப் பயன்படுத்தலாம்.


இப்படித்தான் மத்தியப் பிரதேச நகரத்தின் தலைநகர் போபாலில் இந்திய தேசத்தின் உழைக்கும் மக்கள் 22,000 பேர் ஒரே இரவில் புதைக்கப்பட்டார்கள், ஏறத்தாழ ஆறு லட்சம் இந்தியர்கள் குருடாகவோ, செவிடாகவோ இந்த விபத்தால் தெருக்களில் அலைகிறார்கள், இந்திய நாட்டாமைகள் தங்கள் வழக்கமான தீர்ப்பை வழங்கி விட்டார்கள், ஒவ்வொரு இறந்த இந்தியப் பிணத்திற்கும் ஒரு லட்சம், ஒவ்வொரு இந்தியக் குருடனுக்கும் அல்லது செவிடனுக்கும் ரூபாய் 25,000 இதுதான் நாட்டின் மிகப் பெரிய விபத்துக்கு இழப்பீடு, இத்தனை இழப்புகளுக்கும் காரணமான மனிதனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே மிச்சம்.

இறந்து போன போபால் நகர மக்களில் பலர் தங்கள் நகரின் நடுவில் இத்தனை பயங்கரமான விஷ வாயுவை உற்பத்தி செய்யும் ஒரு ஆலை இருப்பதைக் கூட அறிந்திருக்க மாட்டார்கள், எல்லோரையும் போலவே பலருக்கு வேலை கொடுக்கும் தொழிற்சாலை என்று நம்பி இருந்தார்கள், ஆனால், அவர்கள் யாருக்கும் தெரியாது இந்த விஷ வாயுத் தாக்குதலின் அடிப்படைக் காரணங்கள்:

ஆபத்தும், விளைவுகளும் குறைவான வேதிப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை விதி மீறப்பட்டிருக்கிறது.


ஆபத்தும், விளைவுகளும் அதிகமான அளவில் இருக்கும் வேதிப் பொருட்களை குறைந்த கொள்ளளவுத் திறன் கொண்ட அதிக எண்ணிக்கையிலான ஸ்டீல் அடைப்பான்களில் வைக்க வேண்டும் என்கிற ஆலைகளின் அடிப்படை விதியும் மீறப்பட்டிருக்கிறது.

தரம் குறைவான குழாய்கள் வேதிப் பொருட்களைக் கடத்தும் பயன்பாட்டிற்கு சட்ட விரோதமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது,

வேதிக் கொள்கலன்களில் பயன்படுத்தப்படும் குளிர் பதன வசதி, அண்டர்சன் குழுவினரின் சிக்கன நடவடிக்கைகளில் சிக்கி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு வசதிகள் பலவற்றை அந்த ஆலை மறந்து நான்கு ஆண்டுகள் கழித்தே இந்த விபத்து நிகழ்ந்தது.


இந்தியாவின் அன்றைய இளம் பிரதமரும் முதுபெரும் ஊழல்களின் தலைவருமான ராஜீவ் காந்தியின் நேரடித் தலையீட்டில் இந்த விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடின் தலைவர் அன்டேர்சன் அன்று தப்ப வைக்கப்பட்டார் என்பதை அன்றைய ராஜீவ் காந்தியின் தனிச் செயலராக இருந்த பி.சி.அலெக்ஸாண்டர் ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார், பல்லாயிரக்கணக்கான தனது சொந்த நாட்டு மக்களின் இறப்புக்குக் காரணமான ஒரு மிகக் கொடுமையான முதலாளித்துவக் கொலைகாரனை இன்னொரு கொலைகாரன் தப்ப வைத்த வரலாற்றை, நவீன இந்தியாவின் சிற்பி என்று அடையாளம் காண்கிறது தேசம். கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் பற்றிப் பள்ளிகளில் தலைவர்களாக மாற்றிப் படிக்கும் இளைய தலைமுறை இப்படித்தான் நகர்கிறது இந்திய தேசத்தின் வரலாற்றுப் பக்கங்கள். கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையிலும் பாதியை இந்திய அதிகார வர்க்கம் கொள்ளையடித்து விட்டது தான் இதில் இன்னும் வேடிக்கை.

இந்த தேசத்தின் பொருளாதாரம், இந்த தேசத்தின் உழைப்பு, இந்த தேசத்தின் உரிமை இவை எல்லாவற்றையும் பதினைந்து விழுக்காடு சாதி இந்துக்கள் வைத்திருக்கிறார்கள், மீதி எண்பத்தைந்து விழுக்காடு மக்களின் வாழ்க்கையை இவர்கள் விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். தேசத்தின் பெரும் பதவிகளில் அமர்ந்திருக்கும் ஐந்து விழுக்காட்டுக் கொள்ளைக்காரர்கள் கோடிகளில் ஊழல் புரிகிறார்கள், அவர்களில் மூன்று விழுக்காடு அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும்.

இந்திய தேசம் முதலாளிகளின் சொர்க்கம், உழைக்கும் மக்களின் நரகம், ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்ட 192 நாடுகளின் வரிசையில் முன்னேறிய நாட்டைப் போலவும், பொன்னும் பொருளும் குவியும் புதையல் நாடு போலவும் முதலாளித்துவ ஊடகங்களில் சித்தரிக்கப்படும் இந்திய தேசத்தின் உண்மையான முகம் திரைப்படங்களின் வெளிப்பூச்சிலும், கிரிக்கெட் விளையாட்டின் கொண்டாட்டத்திலும் ஆழமாகப் புதையுண்டு கிடக்கிறது, 3933 பில்லியன் டாலர்கள் கடன், குழந்தை இறப்பு விகிதத்தில் ஏறக்குறைய முதல் ஐம்பது இடத்திற்குள், கண் மண் தெரியாத விலைவாசி உயர்வில் ஏறக்குறைய முதல் முப்பது இடத்திற்குள், ஐம்பது விழுக்காடு இந்தியர்களின் வீடுகளில் இன்னும் மின்சார வசதி இல்லை, இந்தியாவின் கிராமங்கள் சாலையிலிருந்து சராசரியாக இரண்டு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கிறது,இருபது விழுக்காடு இந்தியர்கள் இன்னும் அழுக்கான நீரையே குடிநீராகப் பயன்படுத்துகிறார்கள், இந்தியா உலகிலேயே ஏழைகள் அதிகம் வாழும் நாடு, உலகிலேயே பிறரது உத்தரவுகளின் மீது தங்கள் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் 150 மில்லியன் தலித் மக்கள் இந்த தேசத்தில் தான் வாழ்கிறார்கள்.இந்திய் தேசத்தில் முற்றிலும் கல்வி அறிவு பெறாத மக்கள் ஏறத்தாழ 44 விழுக்காடு, அதாவது உலகின் கல்வி அறிவு பெறாத மக்களின் 35 விழுக்காடு இந்தியாவில் வாழ்கிறது, ஏறத்தாழ 130 மில்லியன் மக்கள் வாழும்

ஜப்பானில் 4000 பல்கலைக் கழகங்கள் இருக்கிறது, ஏறத்தாழ 1300 மில்லியன் மக்கள் வாழும் இந்தியாவில் இருப்பதோ வெறும் 350 பல்கலைக் கழகங்கள், உலகின் மிக மோசமான மருத்துவ வசதிகள் கொண்ட நாடுகளின் வரிசையில் பதினெட்டாவது இடம். உலகின் அமைதியற்ற நாடுகளின் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் இந்தியாவைத் தங்கள் நுகர்வு வணிகத்திற்காக ஒரு அமைதியான புனித பூமியைப் போலச் சித்தரிக்கும் அரச பயங்கரவாதிகளோ, பழங்குடியின மக்களைக் குறி வைத்து "OPERATION GREEN HUNT" இல் தீவிரமாக இருக்கிறார்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டும், அரசுகளைக் காக்க யாரையாவது குற்றவாளியாக்கும் தந்திரத்தின் மூலம் இப்போதும் ஒருவரைக் கண்டு பிடித்திருக்கிறது இந்திய அரசு, அவர் ஓய்வு பெரும் நிலையில் இருக்கும் "அர்ஜுன் சிங்" அன்றைய மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர், அவர் அநேகமாகத் தான் இப்போது வகிக்கும் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார், அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான பணியான ராஜீவ் காந்தியும் குடும்பத்தினரும் எந்தக் குற்றமும் அற்றவர்கள் என்பதை அவர் உறுதி செய்த பின்னர் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம். அதற்கிடையில் இந்தியாவில் ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்தின் உலைகளில் விபத்து ஏற்படலாம், பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து ஒழியலாம்,

யாருக்கென்ன? இருக்கவே இருக்கிறது, பாகிஸ்தான், இருக்கவே இருக்கிறது IPL கிரிக்கெட், இந்திய அரசுகளை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வழி நடத்த..........

No comments:

Post a Comment