Tuesday, July 24, 2012

Facebook politics

அரபு நாடுகளிலும், ஏனைய நாடுகளிலும் சமூக வளைத்தளங்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதிலும், போராட்டக்காரார்களாக பொதுமக்களை மாற்றுவதிலும் இருந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தமிழ்ச் சூழலில் நடப்பது கடினம் என்றே தோன்றுகிறது... முக நூல் போன்ற சமூக தளங்களில் எதிர்ப்பு அரசியலை பதிவு செய்தும், விவாதிக்கவும் செய்யும் அரசியல் ஆர்வலர்கள் இயக்கங்களோடு இணைந்து களத்திற்கோ, போராட்டத்தில் இணையவோ வருவதில்லை... இயக்கங்கள் என்பது நாம் நம்பும் கருத்தியலுக்காகவும், விரும்பும் கோரிக்கைக்காகவும் பேசுவதையும் விவாதிப்பதற்கும் அடுத்தபடியாக செயலில் இறங்க விருப்பமிருப்பவர்களின் சங்கமாகவே இருக்கிறது... இங்கு முக நூலில் சட்டாம் பிள்ளைத்தனமாக இதை ஏன் அந்த இயக்கம் செய்யவில்லை, அதை ஏன் இந்த கட்சி செய்யவில்லை என்று விமர்சன அரசியல் மட்டுமே முன்னெடுக்கும் போக்கு அதிகரிக்கவே செய்கிறது... விமர்சன அரசியல் என்பது களத்தில் பங்கெடுக்காதவர்களிடமிருந்து வரும் போது அனுபவக் குறைபாட்டுடன் இருப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு களப் போராட்டக் காரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையில் சிக்கலில் பங்கெடுக்க விரும்பாதவனாக கேலரியில் கைத்தட்டுபவனாக மட்டுமே இருக்கின்றவனாகின்றான்... அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பது என்பது , இன்றய தமிழ்ச் சூழலில், தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்காக போராட சாலைக்கு வரும் ஒவ்வொருவனுக்கும், முக நூல் விமர்சனம் செய்பவனுக்கு இருக்கும் தடைகளைப் போலவே குடும்பமும், வேலையும், ஒரு முதலாளியும், வருமானம் சார்ந்த வாழ்வும் இருக்கிறது... இதையெல்லாம் கடந்து , களத்தில் நிற்பதால் வேலை பறிபோகும் அபாயமும், குடும்பத்தால் கண்டிக்கப்படும் அபாயமும் இருக்கவே செய்கிறது.. களத்தில் நிற்பவன் ஏதோ தண்ணீர் தெளித்து விடப்பட்டவன் போலவும், அவன் மட்டுமே போராட வேண்டியவன் போலவும், அதை அவன் செய்யாவிடில் விமர்சன தூக்குக் கயிறை அவன் ஏற்க வேண்டும் எனவும் பேசவும் கருத்துப் பரப்பலும் செய்யும் விமர்சன அரசியலை வைப்பவர்கள் தங்களது மேசை நாற்காலியை விட்டு வெளியேறி ஒரு நாளுக்கு அல்லது குறைந்தபட்சம் வாரத்திற்கு, 2 மணி நேரம் களப்போராட்டத்திற்கு ஒதுக்க தயாராகும் போது மட்டுமே அரபு நாடுகளின் எழுச்சி அளவிற்கு இல்லாவிடிலும் குறைந்த பட்ச கூட்டமாவது போராட்ட களத்தில் காண முடியும்... செங்கல்பட்டு முகாமிற்காக குரல்கொடுக்க முக நூல் தமிழர்களில் எத்தனை தமிழர்கள் செங்கல்பட்டில் நடந்த குறைந்த பட்ச போராட்டத்திற்கு வந்தார்கள் என்பதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை... 20 நாட்கள் உண்ணா நிலை இருந்தவர்களை பார்க்கவோ, அவர்களிடத்தில் அக்கரை காட்டவோ விமர்சன அரசியலும், சட்டாம்பிள்ளைத்தனமும் செய்பவர்கள் வந்து நிற்காததை கவனிக்கவே முடியும். அன்று குறைந்த பட்சம் 2000 தமிழர்கள் திரண்டிருந்தால் அவர்கள் விடுதலையடைந்து இருக்கலாம்.... 2-3 மணி நேரம் கூட தான் பேசும் அரசியலுக்காக செலவிடவோ, அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்கவோ, குடும்பத்தின் விருப்பம் மீறியோ வர முயலாதவர்கள் விமர்சன அரசியல் பேசுவதில் என்ன நியாயம்.... குறைந்த பட்சம் களத்தில் நிற்பவனைப் பார்த்து அந்தப் போராட்டத்தைச் செய்தாயே, இதை ஏன் செய்யவில்லை என்று கேட்காதீர்கள்... ஏனென்றால் அதை அவர்தான் செய்யவேண்டும் என்று இல்லை.... ஒரு பதாகையில் உங்கள் கோரிக்கையை எழுதிப்பிடித்துக்கொண்டு நீங்களே கூட சென்று நேரில் கேள்வி கேட்கவும், போராடவும் முடியும்.... போராட்டம் என்பது மக்கள் சார்ந்தது.. அரசியல் அறிவு பெற்றவர்களே களபங்கெடுக்கவில்லை எனில் சராசரி பொது மக்கள் எப்படி பங்கேற்பான்.... விமர்சன அரசியலை எவரும் செய்ய முடியும்.... ஒரு கீபோர்டும், சில மணித்துளி நேர இனையமும் இருந்தால் போதும்..... இரண்டு கமெண்டுகளோ, ஓரிரு படங்களோ மட்டுமே எதையும் சாதிக்கும் என்றால் எல்லோரும் அதைமட்டுமே செய்யலாமே?.... பங்கெடுப்பு அரசியல் அப்படியல்ல அது எதையும் சாதிக்கும், எதிரிகளை வீழ்த்தும்....பங்கெடுப்பு அரசியலை முன்னெடுப்போம்..... நேர்மையான கோரிக்கைக்கு போராடும் கட்சிகள், இயக்கங்களின் நேர்மையான செயல்பாடுகளில் பங்கெடுப்போம்...